என்எல்சி தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை
ஊதிய உயர்வு தொடர்பாக என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களுடன் 12-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று புதுவையில் நடைபெற்று வருகிறது. ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் கோரி என்எல்சி தொழிலாளர்கள் இன்று 39-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததையடுத்து இன்று மீண்டும் மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் சிவராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
.....................பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் வேலைநிறுத்தம்
கோவை, மே.29: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் இன்று இயக்கப்படவில்லை.
பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ 7.50 உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கோவையில் இன்று 10 ஆயிரம் ஆட்டோக்கள் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இயக்கப்படவில்லை.
.................பெட்ரோல் விலை உயர்வு: நாளை மறுநாள் கடையடைப்பு நடத்த அழைப்பு
பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யக் கோரி 31-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏற்கனவே விலைவாசி உயர்வு, கடுமையான மின்பற்றாக்குறை என பல வகைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு மக்களின் சிரமத்தை வெகுவாக அதிகரிக்கும். எனவே தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள கடுமையான பெட்ரோல் விலை உயர்வினை மறுபரிசீலனை செய்து உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும் என வற்புறுத்தி 31-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தொழில் வணிகத் துறையினர் அனைவரும் கடையடைப்பில் முழுவமையாகப் பங்கேற்று கடுமையான பெட்ரோல் விலை உயர்வுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு தொழில் வர்த்தகம் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
..................எண்ணூர் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்
ரசாயனப் பொருள்கள் தட்டுப்பாடு காரணமாக கடல்நீரை சுத்தப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் எண்ணூர் அனல்மின் நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
எண்ணூர் அனல்மின்நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 3 யூனிட்டுகளில் மொத்தம் 130 மெகாவாட் மின் உற்பத்தி ஆனது.
இந்த நிலையில் ரசாயனப் பொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாய்லர்களை குளிர்விக்க முடியவில்லை. இதனால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.
கடல் நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்துவதற்கான ரசாயனத்தை உடனடியாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே எண்ணூர் அனல்மின் நிலையம் மீண்டும் விரைவில் செயல்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
...............................இணையதளம் மூலம் கடன்வாங்கித் தருவதாக மோசடி: 3 பேர் மீது வழக்குப்பதிவு
இணையதளம் மூலம் கடன்வாங்கித் தருவதாக மோசடி செய்த 3 பேர் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் சுஜாதா. இவரிடம் இணையதளம் மூலம் கடன்வாங்கித் தருவதாக சிவகாசியைச் சேர்ந்த கருப்பசாமி, பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜாராம் மற்றும் கண்ணன் ஆகியோர் கூறியுள்ளனர். ரூ 2 கோடி கடன்வாங்கித் தருவதாகவும் அதற்காக ஆவணங்களுக்காக ரூ 13 லட்சம் கமிஷன் தரவேண்டும் என்று வசூலித்துள்ளனர். ஆனால் கடன் வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
............
No comments:
Post a Comment