கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: 30-05-2012 News

Wednesday 30 May 2012

30-05-2012 News


ஜவுளித் துறை வங்கிக் கடன் மறு சீரமைப்பு

ஜவுளித் துறைக்கு உதவும் வகையில் வங்கிக் கடன்களை மறு சீரமைப்பு செய்யும் கோரிக்கையுடன் மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா செவ்வாய்க்கிழமை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பிறகு ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
ஜவுளித் துறையினரின் வங்கிக் கடன்களை மறுசீரமைப்பு செய்யும் விஷயமாக நான் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினேன்.
இது சம்பந்தமாகப் புதிய ஆய்வு ஒன்றை நடத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அந்த ஆய்வு முடிந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக கடன்களை மறுசீரமைப்பு செய்ய வங்கிகள் தங்களுடைய கலந்தாலோசனைகளைத் தொடங்கும் என்றார்.
நிதியமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, விரைவில் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பிரணாப் கூறினார். நான் எடுத்துச் சென்ற பிரச்னையில் இத்துறையினருக்கு சாதகமாகவும் ஆதரவாகவும் பேசினார் என்று ஆனந்த் சர்மா கூறினார்.
ரூ.1 லட்சம் கோடி கடன்... ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ள ஜவுளித் துறையினரின் வங்கிக் கடன்களைக் குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று அந்தத் துறையைச் சேர்ந்த அமைப்பினர் பல்வேறு அமைச்சகங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பருத்தித் தேவை குறைந்ததால், அதன் விலை கடுமையான வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. இதனால் வங்கிகளிடமிருந்து ஜவுளி நிறுவனங்கள் பெற்றுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும் தங்களது முதலீடுகளை நிர்வகிப்பதிலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து கடன்களை மறுசீரமைப்பு செய்ய கோரிக்கை எழுந்தது.
ஜவுளித் துறையினரின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்ய பாங்க் ஆஃப் பரோடாவின் தலைவர் எம்.டி.மல்லையா தலைமையில் ஒரு குழுவை மத்திய நிதி அமைச்சகம் அமைத்தது.
வங்கிக் கடன்கள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று பிரதானமாகக் கூறியது இந்தக் குழு. கடன்கள் குறித்தும் மூலதனம் குறித்தும் ரிசர்வ் வங்கி வகுத்திருக்கும் விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம் கடன் சுமையிலிருந்து சற்று ஆசுவாசம் தரலாம் என்பது அந்தக் குழுவின் பரிந்துரையாக இருந்தது.
ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என முடிவு செய்தது. இந்த நிலையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் ஏ.சக்திவேல் கடன் மறுசீரமைப்பு குறித்துப் பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மிக அதிக அளவில் இருக்கும் வட்டி விகிதங்களும் மூலதனம் இல்லாமையும் சிறிய மற்றும் பெரிய ஜவுளி நிறுவனங்களின் செயல்பாடுகளை மிகவும் பாதித்திருக்கிறது என்று அவர் கூறினார்.
இந்தியத் தொழிலகங்களின் சம்மேளனத்தின் (சி.ஐ.ஐ.) அறிக்கையின்படி, சர்வதேச பொருளாதாரத் தேக்கத்தினால் ஜவுளி நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
பருத்தி விலை வீழ்ச்சியும் இந்தத் துறையை மிகவும் பாதித்துள்ளது என்று சி.ஐ.ஐ.யின் அறிக்கை தெரிவிக்கிறது.
..................

பன்னாட்டு வங்கித் தலைவராக இந்தியர் நியமனம்


ஜெர்மன் தலைநகர் பெர்லினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு வங்கியான டாய்ஷ் வங்கிக்கு இந்தியர் ஒருவர் இணை தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
டாய்ஷ் வங்கியில் 1995-ல் பணிக்குச் சேர்ந்த அன்ஷு ஜெயின் (49) இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் நிதித்துறையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.
2009-ம் ஆண்டு முதல் டாய்ஷ் வங்கியின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்று வருகிறார் ஜெயின். தற்போது, வங்கியின் நிறுவன முதலீடுப் பிரிவின் தலைவராக லண்டனில் பணிபுரிந்து வருகிறார்.
இவருடன் மற்றொரு இணை தலைமைச் செயல் அதிகாரியாக ஜோர்கன் ஃபிட்ஷென் பதவி வகிப்பார்.
வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கும் வங்கியின் பங்குதாரர் கூட்டத்தில் இருவரும் அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்பார்கள் என்று வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவித்திருக்கிறது.
................

5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்


நடப்பு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் போரிஸ் கெல்ஃபாண்டை தோற்கடித்து 5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இன்று மாஸ்கோவில் நடைபெற்ற இறுதிக் கட்ட காய் நகர்த்தலில், டை பிரேக்கரில் அவர் வென்றார்.
..................

மாட்டு வண்டி வாங்க கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பம்

 சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் போட்டுக் கட்டுப்படியாகவில்லை என்று கூறி மாட்டு வண்டி, குதிரை வண்டி மற்றும் அதனை பராமரிக்க ஆகும் செலவு ஆகியவற்றைக் குறிபிட்டு கனரா வங்கிக் கிளையில் இன்று 10 இளைஞர்கள் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து நாங்கள் இனி மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டிகளையே பயன்படுத்தப் போவதாகவும், எனவே அவற்றை வாங்க கடன் அளிக்குமாறும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment