கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: இன்றைய வணிகச் செய்திகள்

Tuesday 5 June 2012

இன்றைய வணிகச் செய்திகள்


கோடை வெயிலால் காய்கறி விலை உயர்வு


கோடை காலங்களில் ஆண்டு தோறும் காய்கறி விலை உயர்ந்து விடும். அதேபோல் இந்த ஆண்டும் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. கிலோ 5 ரூபாய், 10 ரூபாய்க்கு விற்கப்படும் சவ்சவ் இப்போது கிலோ ரூ. 40க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் பீன்ஸ் கிலோ ரூ. 50க்கு விலை உயர்ந்து விட்டது. அவரைக்காய் விலை கிலோ ரூ. 30 ஆக உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு:-

கத்தரிக்காய்- ரூ.18, தக்காளி- ரூ.12, உருளை- ரூ.18, வெண்டைக்காய்- ரூ.15, கோவக்காய்- ரூ.15, பாகற்காய்- ரூ.18, முருங்கைக்காய்-ரூ.22, முள்ளங்கி- ரூ.15, காளிபிளவர்- ரூ.15, சேம்பு- ரூ.20, சேனை- ரூ.18, முட்டைகோஸ்- ரூ.20, பீட்ரூட்-ரூ.20, நூல்கோல்- ரூ.22, கேரட்- ரூ.30, இஞ்சி- ரூ.15, பெ.வெங்காயம்- ரூ.18, சிறிய வெங்காயம்- ரூ.20.

காய்கறி விலை உயர்வு குறித்து கோயம்பேடு வியாபாரி சவுந்தர்ராஜன் கூறுகையில் மழை பெய்தால்தான் இனிமேல் காய்கறி விலை குறையும் என்றார்.
………………

சென்னை அரசு ஆஸ்பத்திரி பயிற்சி மருத்துவர்கள் 2-வது நாளாக ஸ்டிரைக்


சென்னை அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை பயிற்சி டாக்டர்கள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று 2-வது நாளாக பயிற்சி டாக்டர்களின் ஸ்டிரைக் நீடிக்கிறது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லின், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற இயலாத நிலை உள்ளது. டாக்டர்களின் போராட்டத்தால் புறநோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். அரசு டாக்டர்கள் சுமார் 2000 பேர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் உள்நோயாளிகளும், புறநோயாளிகளும் சிகிச்சை பெறுகிறார்கள். அவசர சிகிச்சை, ஆபரேசன் போன்றவைகளும் வழக்கம்போல் நடந்து வருகின்றன.

அரசு ஆஸ்பத்திரியில் உள்ள இருதயம், சிறுநீரகம், கல்லீரல், புற்றுநோய், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை வியாதி, பல்வேறு பிரிவுகளில் வழக்கம்போல் செயல்பட்டாலும் பயிற்சி டாக்டர்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்து நின்று சிகிச்சை பெற்றனர்.

அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை ஒவ்வொரு துறையாக சென்று பார்வையிட்டார். நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பயிற்சி டாக்டர்கள் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும் அரசு டாக்டர்களின் ஒத்துழைப்போடு இதுவரை பாதிப்பு இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆபரேஷன் செய்தவர்களுக்கு அடுத்த கட்ட சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது. குமார் என்பவர் கால் முறிந்து சிகிச்சைக்காக நேற்று வந்தவருக்கு முதல் கட்ட சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாமல் வலியால் அவதிப்படுவதாகவும் தெரிவித்தார்.

புறநோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று சிகிச்சை பெற்றனர். ஏழை- எளியவர்கள் நோயால் பாதிக்கப்படும் போது அரசு ஆஸ்பத்திரியை நம்பிதான் வருவோம். அங்கு சிகிச்சை பெற முடியவில்லை என்றால் எங்கே செல்வது? அதனால் டாக்டர்கள் நோயாளிகள் நிலையை அறிந்து போராட்டத்தை கைவிட வேண்டும் என புறநோயாளிகள் தெரிவித்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் இதே நிலை நீடித்தது. பயிற்சி டாக்டர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசு டாக்டர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும். டாக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் இருப்பது போல 2 அடுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவில் நோயாளியை தவிர உதவியாளர்கள் அனுமதிக்கக்கூடாது. ஆஸ்பத்திரி நுழைவு வாசலில் கூட்டத்தை தடுக்க வேண்டும்.

டாக்டர்கள் தாக்கப்பட்ட விஷயத்தில் சுமூக முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அரசு டாக்டர்கள் நாளை (6-ந்தேதி) முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

புறநோயாளிகள் பிரிவை புறக்கணிப்பது, தேர்வு செய்யப்பட்ட ஆபரேஷன்களை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது. இன்று நடக்கும் மாநில செயற்குழுவில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட டாக்டர் அரசு டாக்டர் ஆவார். நாங்கள் மனிதாபிமான முறையில் 4 நாட்கள் பொறுத்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
……………..

பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பிளாஸ்டிக் பை எனப்படும் நெகிழிப்பைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு செய்கின்றன. பிளாஸ்டிக் சாலை அமைப்பதன் மூலம் இக்கேட்டினை ஒழிக்க முடியாது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதும் இதற்கு தீர்வு அல்ல. எனவே பசுமை பொருளாதாரத்தின் முக்கிய அங்கமான குப்பை ஒழிப்பில் தமிழ்நாடு அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் தீவிரம் காட்டி தமிழ்நாட்டை குப்பை- மாசுபாடு இல்லாத மாநிலமாக மாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த இந்த முயற்சிக்கு பொதுமக்களும் துணை நிற்க வேண்டும். எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு அரசும், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் சட்டவிதிகளை முழுமையாகச் செயல்படுத்தவேண்டும். பொது மக்கள் கடைகளுக்கு போகும்போது கையோடு ஒரு துணிப்பை கொண்டு போகும் பழைய பழக்கத்தை மீண்டும் பின்பற்ற வேண்டும். அதன் மூலம் பிளாஸ்டிக்களை முற்றிலுமாக தவிர்க்க சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
……………….

விஜயா ஆஸ்பத்திரி நர்சுகள் போலீஸ் கமிஷனரிடம் புகார்


விஜயா ஆஸ்பத்திரி நர்சுகள் ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 28-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று காலை எழும்பூரில் ஏராளமான நர்சுகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தினர். 

இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்டு தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு நர்சுகளின் பிரச்சினையை அரசு பேசி தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதற்கிடையே இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நர்சுகள் சங்க தலைவி சபீனா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நர்சுகள் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

விஜயா மருத்துவமனைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவதால் விடுதியில் மின்சாரத்தை துண்டித்து விட்டார்கள். தண்ணீர் சப்ளையையும் நிறுத்திவிட்டனர். எங்களை உயிருடன் கொளுத்தி விடுவதாக மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
………………………..

பெட்ரோல் விலை உயர்வால் கட்டண உயர்வு: ஷேர் ஆட்டோக்களை நாடும் சென்னை வாசிகள்


மணிக்கணக்கில் காத்து நின்று பஸ்சை பிடித்து இடிபட்டு, மிதிபட்டு பயணம் செய்தாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட இடத்தை சென்று சேருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. 

எனவே கால விரயத்தை தவிர்க்கவும் சொகுசாக பயணம் செய்யவும் சென்னை வாசிகள் ஆட்டோவை நாடுவது வழக்கம். ஆட்டோ டிரைவர்களும் இஷ்டத்துக்கு வாடகை பேசி வாடிக்கையாளர்கள் தலையில் தொப்பி போட்டு விடுவார்கள். 

இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்ந்து இருப்பது பெரும் சுமையாகி விட்டது. முன்பு வாங்கிய கட்டணத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வாங்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.50 வரை வாடகை கேட்கிறார்கள். 

ரூ.60 முதல் ரூ.70 வரை வாடகை கொடுத்த இடங்களுக்கு இப்போது வாடகையை அவர்கள் பாஷையில் சொன்னால் ரவுண்ட் ஆக்கிவிட்டார்கள். அதாவது ரூ.100 ஆக்கி விட்டார்கள். 

ஏற்கனவே பல்வேறு சுமைகளை சுமக்கும் பொதுமக்களுக்கு ஆட்டோ கட்டண உயர்வு மேலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பலர் ஷேர் ஆட்டோக்களை நாட தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே சென்னையில் ஆயிரக்கணக்கில் ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. 

திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், திருமங்கலம், ஆவடி, பூந்தமல்லி, போரூர் தியாகராயநகர், அடையாறு, பெரம்பூர் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. 

இந்த ஆட்டோக்களில் டவுன் பஸ்களை போல் ரூ.5 முதல் ரூ.15 வரை தூரத்தை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எல்லா பஸ் நிறுத்தங்களிலும் ஆட்டோக்களை நிறுத்தி போகும் ஊரை உரக்க சொல்லி கூவி கூவி பயணிகளை அழைப்பார்கள். இப்போது பஸ் நிறுத்தங்களில் ஆட்டோ வந்ததும் முண்டியடித்து கொண்டு பயணிகள் ஏறுகிறார்கள். 

டிரைவரின் லெப்டில் ஒருவர், ரைட்டில் ஒருவர். ஆட்டோக்குள் 8 முதல் 10 பேரை ஏற்றி (அடைத்து) ஆட்டோவை கிளப்புகிறார்கள். தினமும் 15 முதல் 20 தடவை இயக்கினால் போதும் தேவையான வருமானம் கிடைத்து விடுகிறது. மேலும் ஷேர் ஆட்டோக்கள் டீசலில் இயங்குவதால் பெட்ரோல் விலை உயர்வால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள். 

அலுவலகங்களுக்கு செல்பவர்கள், தொழில்நுட்ப அலுவலகங்களில் பணிபுரியும் இளம் பெண்கள் டாடா மேஜிக் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்வதை விரும்புகிறார்கள். காரணம் இந்த ஆட்டோக்களில் 8 பேரை மட்டும் ஏற்றுகிறார்கள். 

இந்த வகை ஆட்டோக்களின் பெருக்கம் ஷேர் ஆட்டோக்களுக்கு பலத்த அடி. ஷேர் ஆட்டோக்களை பொதுமக்கள் விரும்ப கட்டண குறைவு முக்கிய காரணம் என்றாலும் இன்னொரு முக்கிய காரணம் முடிந்தவரை போக்குவரத்து நெரிசலில் கிக்காமல் சந்து பொந்தாக நுழைந்து குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்த்து விடுகிறார்கள். 

சாதாரண ஆட்டோக்களில் வாடகை அதிகமாக கேட்பதால் பொதுமக்கள் மிரளுகிறார்கள். ஆளை விட்டால் போதும் என்று ஓடுகிறார்கள். இதனால் சவாரி கிடைக்காமல் திண்டாடும் சாதாரண ஆட்டோக்களும் ஷேர் ஆட்டோவாக மாறி வருகிறது. 

பரங்கிமலையில் இருந்து கீழ்க்கட்டளைக்கு ஆட்டோ வாடகை ரூ.100 கேட்பதால் சவாரி கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக 4 பயணிகளை ஏற்றி ஒவ்வொருவருக்கும் தலா 20 கட்டணம் வசூலிக்கிறார்கள். திரும்பி வரும்போது அதே அளவு வசூல் வருகிறது. இதனால் சவாரிக்காக காத்து கிடக்க வேண்டியதில்லை என்கிறார் டிரைவர் முனியன். 

சரவணன் (ஷேர் ஆட்டோ டிரைவர், வேப்பேரி): நான் வேப்பேரி- எம்.ஆர்.நகர் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறேன். தினமும் 10 டிரிப் குறையாமல் சவாரி கிடைக்கும். ரூ.200 க்கு டீசல் போடுவேன். ரூ.1000 கலெக்ஷன் ஆகும். தவணை தொகை ரூ.350 கட்டி போக தினமும் ரூ.500க்கு குறையாமல் மிஞ்சும். 

வியாசர்பாடி, மூலக்கடை, எம்.ஆர்.நகருக்கு வேப்பேரியில் இருந்து 200 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. வியாசர்பாடிக்கு பஸ் டிக்கெட் ரூ.7 நாங்கள் ரூ.10 வாங்குகிறோம். 3 ரூபாய் உயர்வை வாடிக்கையாளர்கள் பெரிதாக நினைப்பதில்லை. நினைத்த இடத்தில் ஏறலாம், இறங்கலாம், கொகுசாக செல்லலாம் என்பதால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோவை அதிகமாக விரும்புகிறார்கள். சமீப காலமாக வெயிட்டிங் இல்லாமல் சவாரி கிடைக்கிறது. 

பிரபு (ஷேர் ஆட்டோ டிரைவர்): சாதாரண மக்கள், தொழிலாளர்கள், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், ஷேர் ஆட்டோவை விரும்பி வருகிறார்கள். இதனால் காலையிலும், மாலையிலும் தொடர்ச்சியாக சவாரி கிடைக்கும். சாதாரண ஆட்டோவில் வேப்பேரியில் இருந்து எம்.ஆர்.நகருக்கு ரூ.150 வாடகை கேட்பார்கள். நாங்கள் ஷேரில் ரூ.15 கட்டணத்தில் ஏற்றி செல்கிறோம். 

சரஸ்வதி (பயணி): பஸ் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை. வந்தாலும் நெரிசலில் சிக்கி பயணம் செய்வது மிகவும் சிரமம். மேலும் நிறுத்தத்தில்தான் பஸ் நிற்கும். ஆனால் ஷேர் ஆட்டோ பஸ்சைவிட ரூ.2 அல்லது ரூ.3 தான் அதிகம். குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு பயணம் செய்ய முடிகிறது. 

லெட்சுமி (பயணி): முன்பு ரூ.30 கட்டணம் கேட்ட இடத்துக்கு இப்போது ரூ.50 கட்டணம் கேட்கிறார்கள். எனவே ஷேர் ஆட்டோவில் பயணம் செய்கிறேன். இதில் ரூ.7 தான் கட்டணம். பயணமும் நெரிசல் இல்லாமல் சுகமாகத்தான் உள்ளது.
………………………

No comments:

Post a Comment