கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: Enterperner News

Saturday 2 June 2012

Enterperner News

சணல் பொருளில் சூப்பர் லாபம்



‘சணல் மூலம் ஆரம்பத்தில் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் போன்றவை சணலைக் கொண்டு தயாரிக்கப்படு கின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் இருப்பதால் பலர் விரும்பி வாங்கு கின்றனர். எனவே சணல் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை போத்தனூரில் சணல் பைகள் தயாரித்து வரும் பரிதா. அவர் கூறியதாவது: எனது அக்கா அனார்கலி 10 ஆண்டுக்கு முன்பு மத்திய சணல் வாரியம் அளித்த பயிற்சியில் சணல் பொருட்கள் தயாரிக்க கற்று கொண்டு சிறிய அளவில் விற்பனை செய்து வந்தார்.இதையே பெரிய அளவில் செய்ய முடிவு செய்து, வெற்றி மகளிர் சுய உதவி குழுவை துவக்கி, கடன் உதவி பெற்றோம். 3 தையல் மெஷின்கள் மூலம் பல்வேறு சணல் பொருட்களை தயாரித்தோம். மகளிர் குழு தலைவியாக நான் உறுப்பினர்களுடன் சேர்ந்து தைக்கும் பணியில் ஈடுபடுகிறேன். மாதம் ரூ.1.6 லட் சம் மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி செய்கிறோம். பொருட்களை விற்க டவுன்ஹால் மாநகராட்சி வணிக வளாகத்தில் கடை நடத்தி வருகிறோம். உற்பத்தியில் பாதி அங்குதான் விற்பனையாகிறது. மீதியை வெளியிடங்களுக்கு சப்ளை செய்கிறோம். 

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த தயாரிப்புக்கு மாவட்ட நிர்வாகமும், மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகின்றன. கண்காட்சியில் இலவசமாக இடம் அளிக்கின்றனர். உற் பத்தி, கண்காட்சி, கடை ஆகியவற்றில் சுழற்சி முறையில் பணிபுரிகிறோம். அரசின் கல்லூரி, அரசு அலுவலகங்களில் கண்காட்சி நடத்தி ஆர்டர் பெறுகிறோம்.  தென்னை, வாழை நார் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் வேறு. ஆனால் சணல் தனித்துவம் வாய்ந்தது. திடமே இதன் சிறப்பு. பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம். இதில் நல்ல வளர்ச்சி உள்ளது. சணல் பொருட்களுக்கான சந்தை விரிந்து கிடக்கிறது. விற்பது எளிது. லாபம் அதிகம். சணல் பொருட்கள் தயாரிக்க, தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்று கொள்ளலாம். அனைத்து வகை சணல் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக் வருகிறேன். என்னிடம் கற்று பலர் தொழில் துவங்கியுள்ளனர். 
உற்பத்தி செலவு 
சணல் துணியை கொண்டு 35 வகை பொருட்களை உற்பத்தி செய்யலாம்.  ஒரு நபர் ஒரு நாளில் 12க்கு 12 இஞ்ச் அளவுள்ள 10 ஹேண்ட் பேக், 10க்கு 10 அளவுள்ள 50 தாம்பூல பை, 13க்கு 12 அளவுள்ள 10 காலேஜ் பேக், 13 இஞ்ச் அளவுள்ள 25 வாட்டர்பேக், 3 ஷெல்ப் உள்ள 25 லெட்டர் பேட், 12க்கு 10 அளவுள்ள 30 லஞ்ச் பேக், 3 மடிப்புள்ள 15 பர்ஸ், 13க்கு 9 அளவுள்ள 25 பைல், 13க்கு 9 அளவுள்ள 10 லேப்டாப் பேக், 18க்கு 12 அளவுள்ள 20 ஷாப்பிங் பேக், 10க்கு 8 அளவுள்ள 20 சுருக்கு பை, 40 பென்சில் பவுச், 30 கிட் பவுச், 30 மொபைல் பவுச் இவற்றில் ஏதாவது ஒரு வகையை தயாரிக்க முடியும்.எதை உற்பத்தி செய்தாலும் ஒரு நாள் செலவு ரூ.1000. மாதம் 25 நாட்களுக்கு ரூ.25 ஆயிரம். இதர செலவு ரூ.5 ஆயிரம் என மாத உற்பத்திக்கு ரூ.30 ஆயிரம் தேவை.
வருவாய்: மாதம் ரூ.25 ஆயிரம் செலவில் தயாரான பொருட்களை சில்லரையாகவும், மொத்தமாகவும் 75 சதவீத லாபத்தில் விற்கலாம்.  இதன் மூலம் வருவாய் ரூ.43 ஆயிரம், லாபம் ரூ.18 ஆயிரம். விற்பனை அதிகரித்தால் அதற்கேற்ப கூடுதல் தையல் மெஷி ன்கள், கூலியாள் மூலம் உற்பத்தி மேற்கொண்டால் லாபம் கூடும்.
சந்தை வாய்ப்பு: வீட்டில் வைத்தோ, கடை போட்டோ விற்கலாம். கல்லூரி, அலுவலகங்களில் லேப்டாப் பை, பைல் தயாரிக்க ஆர்டர் எடுக்கலாம். திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு வழங்கும் தாம்பூல பைக்கு ஆர்டர் வாங்கலாம். அரசு மற்றும் தனியார் கண்காட்சிகளில் விற்பதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பேன்சி, டிபார்ட்மென்டல் கடைகள் மற்றும் பிரத்யேக ஹேண்ட் பேக் கடைகளுக்கு சப்ளை செய்யலாம்.
உற்பத்தி பொருட்கள்: சணல் துணி உயர்தரம், முதல் தரம், 2ம் தரம் என உள்ளது. மீட்டர் ரூ.50 முதல் ரூ.200 வரை. ஒரு மீட்டரில் சராசரி அளவான 10க்கு 8 இஞ்ச் ஹேண்ட் பேக் 4 தைக்கலாம். தையல் நூல் (1 ரோல் ரூ.32. 100 பை தைக்கலாம்), ஜிப் (மீட்டர் ரூ.3. 5 பை தைக்கலாம்), ஜிப்ரன்னர் (144 ரூ.90. 144 ஜிப் தைக்கலாம்) ஸ்டீல் பட்டன், லாக் பட்டன்(1க்கு ரூ.5), ஹேண்டில் காட்டன் ரோப் (கிலோ ரூ.80. 100 பை தைக்கலாம்)
கிடைக்கும் இடங்கள்: சணல் துணி கொல்கத்தாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு மொத்தமாக கொள்முதல் செய்யலாம். விலை குறைவு. இதுதவிர சென்னை, புதுவையில் கிடைக்கும். காட்டன் ரோப் ஈரோடு மாவட்டம் குமாரபாளையம், பவானி ஆகிய இடங்களில் கிடைக்கிறது. மற்ற பொருட்கள் அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது.
தயாரிக்கும் முறை
சணல் துணியை தேவையான பொருட்களின் அளவுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும், கலை நயத்தோடு தைக்கவும் பயிற்சி அவசியம். மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்களை கொண்டு தான் தைக்க முடியும். சாதாரண துணிகளை தைப்பது போல் எளிதாக இருக்காது. சணல் துணிகளை தைப்பது துவக்கத்தில் கடினமாக இருக்கும். காலப்போக்கில் எளிதாகும். ஒவ்வொரு பொருளுக்குரிய தனித்துவத்தை அறிந்து அதற்கேற்ப தைப்பது முக்கியம். உதாரணமாக ஹேண்ட் பேக்கில் 5 அறைகள் இருக்குமாறு தடுப்பு அமைக்க வேண்டும். அதற்கு லைனிங் துணி பயன்படுத்த வேண்டும். தாம்பூல பை தயாரிக்க கைப்பிடியாக காட்டன் ரோப் பயன்படுத்த வேண்டும். காலேஜ் பேக்கில் நீளமான பெல்ட் டேப் அமைக்க வேண்டும். அதில் 2 அறைகள் மற்றும் வெளியில் ஜிப்புடன் ஒரு அறை தைக்க வேண்டும்.

லெட்டர் பேடு தயாரிக்க லேமினேஷன் சணல் துணியை பயன்படுத்த வேண்டும். முன்புற துணிக்கு சோபா தயாரிக்க பயன்படுத்தப்படும் கெட்டியான துணியை பயன்படுத்த வேண்டும். பர்ஸ் தயாரிக்க வெளியே வழவழப்பான கலம்காரி துணி, பைல் மற்றும் லேப்டாப் பை தயாரிக்க உயர்தர சணல் துணி தேவை. இலவச பயிற்சி: மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் மத்திய சணல் வாரிய கிளைகள் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டண முறையில் தனியார் பயிற்சி அளிக்கின்றனர். முதலீடு: உற்பத்தி, இருப்பு வைத்தல், விற்பனைக்கு என 20க்கு 10 அடி கொண்ட தடுப்பு அறை போதும். பவர் தையல் மெஷின் ரூ.10 ஆயிரம், கட்டிங் டேபிள்  ரூ.3 ஆயிரம், கத்தரிக்கோல் ரூ.250, ரேக், ஹேங்கர்கள் ரூ.6,750. முதலீடு ரூ.20 ஆயிரம். வீட்டில் ஏற்கனவே தையல் மெஷின், டேபிள் போன்றவை இருந்தால் ரூ.10 ஆயிரம் போதும்.
.......................

ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு


சோப் பவுடர், சோப் ஆயில்  போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர்.  அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை உடையாம்பாளையத்தில் பாண்டியன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப் தயாரித்து வரும் லதா. அவர் கூறியதாவது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத் தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழு வதுமாக  போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள்  துவைப்பதற்கு சோப் களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். 

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் சோப்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட பிராண்ட் கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில்  பிரபலமாக இருக்கும். நன்றாக விற்கும். இந்த அடிப்படையில்தான் நாங்கள் சோப் தயாரிக்கும் தொழிலை தொடங்கினோம்.எங்கள் தயாரிப்பு கொங்குமண்டல பகுதிகளில் நன்றாக விற்கிறது.  போட்டி அதிகம் இருப்பதால் சோப் தயாரிப்பில் தரத்தை கடைபிடிப்பது முக்கியம். அதேபோல குறைந்த லாபத்தில் விற்க வேண்டும். அப்போதுதான், ஒருமுறை வாங்கியவர்கள் நம்மிடம் வாடிக்கையாக வாங்குவார்கள். பின்னர் விலையை சற்று கூட்டினாலும் ஏற்றுக் கொள்வார்கள். 2002ல்  தொழிலை துவக்கினேன். உற்பத்தி, கொள்முதல் மற் றும் விற் பனையை கணவர் பார்த்து கொள் கிறார். நிர்வாகத்தை நான் பார் த்து கொள் கிறேன். துவக்கத்தில் கணவரும் நானும் தொழிலாளியாக களத்தில் இறங்கி உழைத் தோம். இதனால் உற்பத்தி செலவு குறைந்தது. குறைந்த விலைக்கு விற்க முடிந்தது. இப்போது  சோப் போடு சலவை பவுடர், பாத்திரம் துலக்கும் சோப், பவுடர் ஆகியவை யும் தயாரித்து விற்கி றோம்.  புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் குடும்பமாக உழைத்து, உற்பத்தி செலவை குறைத்து, குறைந்த விலையில் விற்றால்தான் இப்போதைய போட் டிக்கு தாக்கு பிடிக்க முடியும். 
தயாரிப்பது எப்படி?
சோப் தயாரிக்கும் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும். அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.
கட்டமைப்பு: 2500 சதுர அடி ஷெட் அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம், மின் இணைப்பு 5 எச்பி ரூ.5 ஆயிரம், சோப் தயாரிக்கும் இயந்திரம் ரூ.5 லட்சம், சோப் கட்டி அடுக்க டிரே 50 ரூ.2 ஆயிரம்,  10 கேன் ரூ.2 ஆயிரம்,  இதர பொருட்கள் ரூ.1000. அடிப்படை கட்டமைப்பு செலவு ரூ.5.6 லட்சம், முதல் மாத உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம், மொத்த முதலீடு ரூ.11.37 லட்சம்.
உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம். ஒரு டன் சோப் தயாரிக்க கெமிக்கல் செலவு ரூ.27 ஆயிரம் வீதம் 20 டன்னுக்கு ரூ.5.4 லட்சம். கட்டிட வாடகை ரூ.5 ஆயிரம், மின் கட்டணம் ரூ.2 ஆயிரம், 6 பேர் சம்பளம் ரூ.30 ஆயிரம் என மாத நிர்வாக செலவு ரூ.37 ஆயிரம். மொத்த உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம். ஒரு டன் சோப் தயாரிக்க ரூ.28,850 செலவாகிறது. 
வருவாய்: ஒரு டன் சோப்பை ரூ.30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ.1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ.23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும். 
தேவையான பொருட்கள் : சோடா (டன் ரூ.21 ஆயிரம்), சிலரி ஆயில் (டன் ரூ.95 ஆயிரம்), டினோபால் பவுடர் (கிலோ ரூ.1350), க்ளே (டன் ரூ.5 ஆயிரம்), கால்சைட் (டன் ரூ.3 ஆயிரம்), சிலிகேட்(டன் ரூ.8 ஆயிரம்),  எஸ்டிபிபி பவுடர் (டன் ரூ.90 ஆயிரம்), சென்ட் (கிலோ ரூ. 1000), நீல நிற பவுடர் (கிலோ ரூ.100).
கிடைக்கும் இடங்கள் : சோடா - கோவை, சிலரி ஆயில் -  புதுவை, டினோபால் பவுடர் - மும்பை, க்ளே - கேரளா, கால்சைட் -  சேலம், சிலிகேட் - கோவை, எஸ்டிபிபி பவுடர், சென்ட், புளூ கலர் பவுடர் - கோவை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும். மொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.
சந்தை வாய்ப்பு
குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக்கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம்.கடைகளில் வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது. புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம். உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாக பேக்கிங் மெஷினை பயன்படுத்தலாம். இதன்மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.

சலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்கலாம். சோப் உற்பத்தி செய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷே ஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷே பேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை. தற்போது பாத்திரம் துலக்கும் சோப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது.  சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில் பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும் மாறுபடும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றதுதான். பாத்திரம் துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரிக்கலாம்.
.................

சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு!


பப்ஸ், பீசா போன்ற மேற்கத்திய உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். குழந்தைகளுக்கு இந்த உணவுகளை பழக்குவதால் அவர்களின் உடல்நலம் கெடும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவுகளுக்கு மாற்றாக இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து  சத்துமாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே சத்துமாவு தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலை தங்கம்மாள் ஓடை எம்.பி நகரை சேர்ந்த ஷகிலாபேகம். அவர் கூறியதாவது:
கொங்கு மண்டலத்தில் பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக சத்துமாவு கூழ் பருகுவது வழக்கத்தில் உள்ளது. தினசரி காலை ஒரு டம்ளர் தண்ணீரை  கொதிக்க வைத்து அதில் 2 ஸ்பூன் சத்து மாவை போட்டு காய்ச்சி டீ, காபிக்கு பதிலாக குடிப்பார்கள். சத்துமாவுக்கு இருக்கும் தேவையை அறிந்து போகன்வில்லா மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரித்து விற்க முடிவு செய்தோம். எங்களுக்கு தனியாக பயிற்சி தேவைப்படவில்லை. வீட்டில் தயாரித்த அனுபவமே கைகொடுத்தது. நாங்கள் தயாரித்த சத்து மாவை தெரிந்தவர்களுக்கு  குறைந்த லாபத்தில் விற்றோம். 
எங்கள் தயாரிப்பின் சுவை, மணம், தரம் அவர்களை கவர்ந்தது.தானியங்களை முளை கட்டி, காய வைத்து, அரைக்கும் வேலை மிச்சமானதால் தொடர்ந்து எங்களிடம் வாங்கினர்.  இதன்மூலம் எங்கள் தயாரிப்பு பிரபலமானது. பின்னர் படிப்படியாக புதிய வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் மாவை அறிமுகப்படுத்தினோம். கடைகளுக்கும் விற்றோம். பெண்கள் வீட்டில் இருந்தவாறே மேற்கொள்ள ஏற்ற தொழில் இது. மக்களுக்கு ஆரோக்கியமான உணவை விற்கிறோம் என்ற மனநிறைவு இத்தொழிலில் உண்டு.
சத்து மாவு தயாரிக்க பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. செய்வதை ஒரு முறை பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். சமையலில் திறமை உள்ளவர்களுக்கு அதுவும் தேவையில்லை. செய்முறையை படித்து பார்த்தே செய்து விடுவார்கள். 
தயாரிக்கும் முறை 
தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ (ரூ.34), சோளம் 2 கிலோ (ரூ.40), கம்பு 2 கிலோ (ரூ.32), பாசிப்பயறு அரை கிலோ (ரூ.28), கொள்ளு அரை கிலோ (ரூ.10), மக்காசோளம் 2 கிலோ(ரூ.28), பொட்டுக்கடலை ஒரு கிலோ (ரூ.70), சோயா ஒரு கிலோ (ரூ.58), தினை அரை கிலோ (ரூ.18), கருப்பு உளுந்து அரை கிலோ (ரூ.30), சம்பா கோதுமை அரை கிலோ (ரூ.30), பார்லி அரை கிலோ (ரூ.30), நிலக்கடலை அரை கிலோ (ரூ.40), அவல் அரை கிலோ (ரூ.40), ஜவ்வரிசி அரை கிலோ (ரூ.25), வெள்ளை எள் 100 கிராம் (ரூ.12), கசகசா 50 கிராம் (ரூ.30), ஏலம் 50 கிராம் (ரூ.50), முந்திரி 50 கிராம் (ரூ.25), சாரப்பருப்பு 50 கிராம் (ரூ.25), பாதாம் 50 கிராம் (ரூ.25), ஓமம் 50 கிராம் (ரூ.15), சுக்கு 50 கிராம் (ரூ.15), பிஸ்தா 50 கிராம் (ரூ.20), ஜாதிக்காய் 2 (ரூ.5), மாசிக்காய் 2 (ரூ.5), 
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும். அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும். 
பயன்கள்
ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க  வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர்  சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும். 
 இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
6 மாதம் கெடாது 
சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.
உற்பத்தி செலவு: தயாரிக்க எடுத்த 15 கிலோ தானியங்களுக்கான செலவு ரூ.740. அரவை கூலி கிலோ ரூ.4 வீதம் ரூ.60. 1 ஆள் கூலி ரூ.150, ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.950. மாதத்தில் 25 நாள் உற்பத்தி செலவு ரூ.23,750, விற்பனை தொடர்பான இதர செலவுகள் மாதம் ரூ.1,250. மொத்த மாத செலவு ரூ.25,000.
வருவாய்: 15 கிலோ தானியங்களை காயவைத்து அரைத்தால் 12 கிலோ சத்து மாவு கிடைக்கும். ஒரு கிலோ ரூ.120 வீதம் விற்கலாம். இதன் மூலம் ஒரு நாளைக்கு வருவாய் ரூ.1,440. 25 நாளில் வருவாய் ரூ.36,000. செலவு போக லாபம் ரூ.11,000.
சந்தை வாய்ப்பு : பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், காதி, சர்வோதய விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யலாம். சத்துமாவை  தற்போது மக்கள் விரும்பி வாங்கு கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு என்பதால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை. 
..................

பேப்பர் கவரில் சூப்பர் லாபம்


சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு காரணமாக பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, பேப்பர் கவர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் பேப் பேக்ஸ் எனும் நிறுவனம் நடத்தி வரும் தனராஜ். அவர் கூறியதாவது: பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன்.

பொள்ளாச்சி அடுத்த கேரள பகுதிகளில், பாலிதீன் கவர்களுக்கு பதில், பேப்பர் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையால், பேப்பர் கவர் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. என் அப்பா பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை துவங்கினார். அதன் பிறகு நானும் பேப்பர் கவர் தயாரிக்க துவங்கினேன். பொள்ளாச்சியில் இது போல 13 நிறுவனங்கள் உள்ளன.  கோவையில்கூட இந்தளவு இல்லை. பொள்ளாச்சியில் இயங்கும் பெரும்பாலான பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளாவை சந்தை இடமாக கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நான் கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களை குறி வைத்து உற்பத்தியை துவக்கினேன். பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்று வருகிறேன். படிப்படியாக உற்பத்தி அதிகரித்துள்ளது. 

பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் பிற மாவட்டங்களில் குறைவாக உள்ளது. புதிய தொழில் முனைவோர் பேப்பர் கவர் உற்பத்தியை துவக்கி, தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும். படிப்படியாக இத்தொழிலை மேம்படுத்தி நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பெண்களும் இத்தொழிலில் ஈடுபடலாம். 
செலவு, வருவாய்
ஒரு நாளில் 200 கிலோ பேப்பர் வீதம் மாதத்தில் 25 நாளில் 5 டன் பேப்பரில் கவர்கள் தயாரிக்கலாம். ஒரு கிலோ பேப்பர் ரூ.29 வீதம் 5 டன்னுக்கு ரூ.1.45 லட்சம், வாடகை ரூ.2500, மின்கட்டணம் ரூ.1000, 3 தொழிலாளர்கள் சம்பளம் ரூ.15 ஆயிரம். இதர செலவுகள் ரூ.5 ஆயிரம் என மாதத்துக்கு ரூ.1.68 லட்சம். கவர்கள் 100 எண்ணிக்கை வீதம் சராசரி விலை:  6 செமீ அகலம், 10 செமீ நீளமுள்ளவை ரூ.30, 7X12 ரூ.36, 9X13ரூ.46, 10X16ரூ.65, 12X19 ரூ.85, 14X18ரூ.100, 14X22ரூ.115, 18X24, 18X26, 18X28, 18X33 ஆகியவை ரூ.150, 22X26, 22X28, 22X30, 22X33, 22X37 ஆகியவை ரூ.230, 26X33, 26X37, 26X39  ரூ.250, 31X44ரூ.480, 36X48  ரூ.570க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை விலையோடு, உற்பத்தி செலவை ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 10 சதவீத லாபம் அல்லது மாதம் சராசரியாக ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். கடைகளில் நேரில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்தால் கூடுதல் விலைக்கு விற்கலாம். லாபமும் அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.
கட்டமைப்பு : 20 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட ஷெட். இதை 3 பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் இயந்திரம், மற்ற பகுதிகளில் அலுவலகம், ஸ்டோர் ரூம் என பயன்படுத்தலாம். வாடகை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். ஒரு எச்பி மின் இணைப்பு (ரூ.2 ஆயிரம்) வேண்டும்.
முதலீடு: பேப்பர் கவர் இயந்திரம் ரூ.2.5 லட்சம், 2 டேபிள் ரூ.8 ஆயிரம், 4 அலுவலக சேர்கள் ரூ.1,000, பசை காய்ச்ச இரும்பு அடுப்பு, அலுமினிய பாத்திரம், பிளாஸ்டிக் வாளி ,  2 மக் உள் ளிட்ட இதர பொருட்கள் ரூ.1000. 
முதலீட்டுக்கு ரூ.2.82 லட்சம் தேவை. (முதல் மாத உற்பத்தி செலவு ரூ.1.68 லட்சம் தனி) 
தேவையான பொருட்கள் : பேப்பர் கவருக்கென பிரவுன் நிற கிராப் பேப்பர் (கிலோ ரூ.29), ரப்பர் பேண்ட் (கிலோ ரூ.350), பசை காய்ச்ச மரவள்ளிக்கிழங்கு மாவு, துத்தம், பிளாஸ்டிக்  கட்டு கயிறு.
கிடைக்கும் இடங்கள்: பேப்பர் கவர் இயந்திரங்கள் பொள்ளாச்சி, கோவை நகரங்களிலும், கிராப் பேப்பர் உடுமலை உள்ளிட்ட பேப்பர் மில்களிலும் கிடைக்கிறது.  
விற்பனை வாய்ப்பு: மருந்து கடையில் சிறிய பேப்பர் கவர்கள்  பயன்படுத்தப்படுகிறது.  பேக்கரி, பேன்சி ஸ்டோர், டெக்ஸ்டைல், லாண்டரி, டெய்லரிங் ஆகியவற்றில் பெரிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படு கின்றன. இதனால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை. கடைகளுக்கு நேரடியாகவோ, பேப்பர் கவர் மொத்த விற்பனை கடைகளுக்கோ வாடிக்கையாக சப்ளை செய்யலாம்.
தயாரிப்பு முறை
பேப்பர் ரோல் 13.5 செமீ, 15.5, 19.5, 21.5, 25.5, 29.5, 37.5, 45.5, 53.5, 63.5, 73.5 செமீ என பல்வேறு அகலங்களில் கிடைக்கிறது. அதன் மூலம் 10 செமீ நீளம், 6 செமீ அகல கவர் முதல் 7ஜ்12, 9ஜ்13, 10X16, 12X19, 14X18, 14X22, 18X24, 18X26, 18X28, 18X33, 22X26, 22X28, 22X30, 22X33, 22X37, 26X33, 26X37, 26X39, 31X44, 36X48 ஆகிய அளவுள்ள கவர்கள் தயாரிக்கலாம்.
வெவ்வேறு அளவு கவர்களை தயாரிக்க அதற்குரிய பிளேட், பேப்பர் ரோலை இயந்திரத்தில் பொருத்த வேண்டும். கவரின் மத்திய பகுதி மற்றும் கீழ் பகுதியை ஒட்ட தேவையான பசையை இயந்திரத்தில் உள்ள டேங்க்கில் நிரப்ப வேண்டும்.   

பின்னர் இயந்திரத்தை இயக்கினால் பிளேட்டின் கீழ்பகுதி வழியாக பேப்பர் ஓடும். அதன் மேல் பகுதியில் பேப்பர் மடித்து, கவரின் மத்திய பகுதியில் பசை ஒட்டும். அங்கிருந்து நகரும் பேப்பர் குறிப்பிட்ட அளவில் துண்டிக்கப்பட்டு அடுத்த பகுதிக்கு செல்லும். அங்கு கீழ் பகுதி ஒட்டப்பட்டு கவர் தயாராகும். உற்பத்தியான கவர் 50 எண்ணிக்கை சேர்ந்தவுடன் ஒரு முறை விளக்கு எரியும். கவர்களை 50 அல்லது 100 எண்ணிக்கையில் அடுக்கி ரப்பர் பேண்ட் போட்டால் விற்பனைக்கு தயார். இயந்திரம் துவக்கத்தில் ஓடும்போது பசை சீராக செல்கிறதா, ஒட்டப்படுகிறதா, சரியான அளவுகளில் வெட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஓட்டம் சீரானவுடன் ஒரு இயந்திரம் மூலம் நாள்தோறும் 8 மணி நேரத்தில் 200 கிலோ பேப்பரில் கவர் தயாரிக்கலாம். அளவுகளுக்கேற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும்.
....................

காசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு !


 ‘தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ என்கிறார் கோவை குனியமுத்தூரில் பெஸ்ட் நேச்சுரல் அண்ட் கம்பெனி நடத்திவரும் ஜெயந்தி. அவர் கூறியதாவது: விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த 5 ஆண்டாக கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரித்து விற்கிறோம்.

இது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது. மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை.  வரும் காலத்தில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் பயன்பாடு அதிகரிக்கும். கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கண்காட்சிகளில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் இடம்பெற்றுள்ளது. பலர் எங்கள் தயாரிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.  இவ்வாறு ஜெயந்தி கூறினார்.
விற்பனை வாய்ப்பு
மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் விற்பனையகங்கள், நாட்டு மருந்து கடைகள், மருந்து கடைகள் ஆகியவற்றில் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் விற்கப்படுகிறது. அங்கு நேரடியாக சப்ளை செய்யலாம். தினசரி கடைக்கு 5 பாட்டில் வீதம் 20 கடைகளுக்கு ஒரு நாள் உற்பத்தியான 4 லிட்டர் லிக்யுட்டை (100 பாட்டில்) எளிதில் விற்கலாம். இவ்வாறு சுழற்சி முறையில் வெவ்வேறு கடைகளில் சப்ளை செய்யலாம். தெரிந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நேரடியாகவும் விற்கலாம். தரம் மிகவும் முக்கியம். நல்ல தரத்தோடு விலையும் ஏற்றதாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விற்பனையும் அதிகரிக்கும்.
கட்டமைப்பு : மூலிகை லிக்யுட் காய்ச்ச வீட்டு சமையலறை, மூலிகைகளை காய வைக்க திறந்தவெளி. தளவாட சாமான்கள்: வர்த்தக கேஸ் சிலிண்டர் அடுப்பு, 15 லிட்டர் குக்கர், 30 அடி நீள பைப், அகன்ற பாத்திரம், 10 லிட்டர் பாத்திரம், 40 மி.லி காலி பெட் கன்டெய்னர்கள், லேபிள், பேப்பர் பேக்கிங் பாக்ஸ். இவற்றுக்கு செலவு ரூ.15 ஆயிரம்.
தேவைப்படும் பொருட்கள்: வேப்பிலை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை. நாட்டு மருந்து கடைகளில் மற்ற மூலிகை பொருட்கள் கிடைக்கின்றன. சோற்று கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம். பெட் கன்டெய்னர் பாட்டில்கள் கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கின்றன.
உற்பத்தி செலவு(மாதத்துக்கு): வேப்பிலை 500 கிராம் ரூ.10, துளசி 500 கிராம் ரூ.25, நொச்சி இலை 700 கிராம் ரூ.70, மஞ்சள் 100 கிராம் ரூ.10, சாம்பிராணி 150 கிராம் ரூ.40, குங்குலியம் 150 கிராம் ரூ.30, தும்பை 50 கிராம் ரூ.10, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை 1 கிலோ ரூ.20, 4 லிட்டர் மூலிகை கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் தயாரிக்க தேவையான மூலிகை பொருட்கள் செலவு ரூ.250, பேக்கிங் மெட்டீரியல் செலவு ரூ.50, உழைப்பு கூலி 2 நபருக்கு ரூ.300 வீதம் ரூ.600, இதர செலவுகள் ரூ.100 என தினசரி 1000 ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம் தேவை. 
வருவாய்: உற்பத்தி செய்யப்படும் லிக்யுட் 40 மி.லி அளவுகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் ரூ.25க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது. அவர்கள் ரூ.40 வரை விலை வைத்து விற்கிறார்கள். இவ்வாறு தினசரி உற்பத்தியாகும் 4 லிட்டர் லிக்யுட்டை 100 பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் ரூ.2,500 கிடைக்கும். செலவு போக தினசரி லாபமாக ரூ.1,500 கிடைக்கும். இதுவே மாதத்தில் 25 நாட்களில் லாபம் ரூ.37,500.
தயாரிப்பது எப்படி?
வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை).  குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.

பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான் கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம். 
எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.

No comments:

Post a Comment