கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி-*தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு-* இன்றைய வணிகம்-நாளிதழ்: News

Wednesday 6 June 2012

News


விற்பனையை அதிகரிக்க ஆவின் புதிய பார்முலா!


சென்னை: நெய், வெண்ணெய் விற்பனையை ஆவின் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. பால் கொள்முதல் செய்து விற்பனை செய்வதில் கிடைக்கும் லாபத்தை விட, கூடுதல் லாபம் பால் உபபொருட்கள் விற்பனையில் கிடைப்பதால், இந்த பார்முலாவை, ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் பெரும்பாலான பால் பண்ணைகளும், இந்த பார்முலாவைத் தான் பின்பற்றியும் வருகின்றன. தமிழக அரசு அறிவித்துள்ள இரண்டாவது பசுமை புரட்சிக்கு, இந்த புதிய பார்முலா ஏற்றதாக உள்ளது என, ஆவின் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
22
லட்சம் லிட்டர்: ஆவின் நிறுவனம் ஆண்டு சராசரியாக, நாள் ஒன்றுக்கு, 22 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. 2010 மே மாதத்தில், பால் கொள்முதல் 22.19 லட்சம் லிட்டராக இருந்தது. இக்கொள்முதல், கடந்த ஆண்டு மே மாதத்தில், 25.08 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ள கறவை மாடுகள் மூலம், 32 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாகக் கிடைத்துள்ளது. மேலும், மாதம் ஒன்றுக்கு பால் கொள்முதல் இலக்கை, 28 லட்சமாக உயர்த்தவும், ஆவின் இலக்கு நிர்ணயித்துள்ளது. கூடுதல் லாபத்துக்காக மட்டும் பால் கொள்முதலை அதிகரிக்கவில்லை. அதிலிருந்து கிடைக்கும் உபபொருட்களான நெய், வெண்ணெய், பால்கோவா போன்றவற்றின் விற்பனை மூலமும் லாபத்தை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம் என, ஆவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நெய்: சென்னை மாநகரில், கடந்த 2010 மே மாதத்தில் மட்டும், 41 ஆயிரம் கிலோ நெய் மற்றும் வெண்ணெயை ஆவின் விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை கடந்த மே மாதத்தில், 60 ஆயிரம் கிலோவாகவும், 47 ஆயிரம் கிலோவாகவும் உயர்ந்துள்ளது. சென்னையைத் தவிர, மாவட்டங்களில் உள்ள பால் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம், 41,700 கிலோ நெய்யும், 53 ஆயிரம் கிலோ வெண்ணையும், 2010 மே மாதத்தில் விற்பனையாகியுள்ளன. இந்த விற்பனை, கடந்த மே மாதத்தில், 61 ஆயிரம் கிலோவாகவும், 7,635 கிலோவாகவும் இருந்தது. பால் மற்றும் அதன் உபபொருட்கள் விற்பனை, 2010 மே மாதத்தில், 3.6 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மே மாதத்தில், 6.2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இரு மடங்கு: ஆவின் மூலம் கடந்த இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட, ""மேங்கோ மில்க ஷேக்'' பாக்கெட்கள் விற்பனை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகரில், கடந்த மே மாதம் மட்டும், ""மேங்கோ மில்க ஷேக்'' விற்பனை, 40,000 பாக்கெட்களாக இருந்தது. இந்த விற்பனையை இரு மடங்காக உயர்த்தவும், ஆவின் திட்டமிட்டுள்ளது. ""மேங்கோ மில்க் ஷேக்'' பாக்கெட்கள் தயாரிப்பதற்காக, சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத்தில், 3.7 கோடி ரூபாயில் புதிய இயந்திரம் வாங்கப்பட்டு உள்ளது. பால் உபபொருட்கள் விற்பனைக்காக, அம்பத்தூர் ஆவின் நிலையம் அருகே, 1.2 கோடி ரூபாயில் புதிய விற்பனையகம் துவங்கப்பட்டு உள்ளது. இந்த விற்பனையகத்தில், ஐஸ்கிரிம், மைசூர்பாகு, குல்பி ஆகியனவும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக மட்டும் நாளொன்றுக்கு, 10 ஆயிரம் லிட்டம் பால் செலவிடப் படுகிறது. இதை, 20 ஆயிரம் லிட்டராக உயர்த்துவும் திட்டமிட்டுள்ளோம். கோவை, ஈரோடு, திருச்சி, மதுரை ஆகிய பால் கூட்டுறவு ஒன்றியங்களும், பால் உபபொருட்கள் விற்பனையை அதிகரித்து வருகின்றன.
சென்னை மாநகரில் உள்ள 40 ஆவின் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை, 60ஆக உயர்த்தவும், 150 பால் பூத்களை 185ஆக அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. இதுதவிர, விரைவில் நடமாடும் "பார்லர்களும்'' அறிமுகம் செய்யப்பட உள்ளன என்றும், ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
……………

தொடர்ந்து இரண்டு மாதங்களாக சர்வதேச காபி ஏற்றுமதியில் சரிவு



புதுடில்லி:நடப்பாண்டு, ஏப்ரல் மாதத்தில், சர்வதேச காபி ஏற்றுமதி, 87.70 லட்சம் மூட்டைகளாக (1 மூட்டை-50 கிலோ) குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 12 சதவீதம் (99.30 லட்சம் மூட்டைகள்) குறைவாகும்.இதையடுத்து, சர்வதேச காபி ஏற்றுமதி, தொடர்ந்து இரண்டு மாதங்களாக குறைந்துள்ளது என, உலக காபி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்ற மார்ச் மாதத்தில், சர்வதேச அளவில், இதன் ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட, 7 சதவீதம் குறைந்து, 1.19 கோடி மூட்டைகளிலிருந்து, 98.80 லட்சம் மூட்டைகளாக குறைந்து காணப்பட்டது.அதேசமயம், சென்ற பிப்ரவரி மாதத்தில், சர்வதேச காபி ஏற்றுமதி, 7 சதவீதம் உயர்ந்து, 86.70 லட்சம் மூட்டைகளிலிருந்து, 93.20 லட்சம் மூட்டைகளாக உயர்ந்திருந்து என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு காபி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான, ஏழு மாத காலத்தில், சர்வதேச காபி ஏற்றுமதி, 6 கோடி மூட்டைகளாக குறைந்துள்ளது. இது, முந்தை பருவத்தில், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 4 சதவீதம் (6.33 கோடி மூட்டைகள்) குறைவாகும்.சென்ற ஏப்ரல் வரையிலான, 12 மாத காலத்தில், இதன் ஏற்றுமதி, 10.34 கோடி மூட்டைகளிலிருந்து, 10.20 கோடி மூட்டைகளாக குறைந்துள்ளது என, இந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. 
…………

நடப்பு 2011- 12ம் பருவத்தில் பருத்தி உற்பத்தி 3.47 கோடி பொதிகளாக உயரும்



புதுடில்லி:நடப்பு 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.47 கோடி பொதிகளாக இருக்கும் என, பருத்தி ஆலோசனை வாரியம் (சி.ஏ.பீ.,) மறு மதிப்பீடு செய்துள்ளது. இது, முதல் மதிப்பீட்டில், 3.45 கோடி பொதிகளாக (1 பொதி-170 கிலோ) இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.பயன்பாடு:அதேசமயம், உள்நாட்டில், பருத்தி பயன்பாடு, நடப்பு பருவத்தில், 2.50 கோடி பொதிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இது, கடந்த பருவத்தில், 2.60 கோடி பொதிகள் என்றளவில் இருந்தது. மத்திய வேளாண் அமைச்சகம், நடப்பு 2011-12ம் வேளாண் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.52 கோடி பொதிகளாக இருக்கும் என மதிப்பீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு பருவத்தில், சென்ற மே 27ம் தேதி வரையிலுமாக, பருத்தி சாகுபடி செய்யும் முக்கிய பகுதிகளிலிருந்து, சந்தைகளுக்கு, 3.22 கோடி பொதிகள் வந்துள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக, 65 ஆயிரம் பொதிகள் என்றளவில் இதன் வரத்து உள்ளதாக, இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.
நடப்பு சந்தையில், பல்வேறு தரம் கொண்ட, ஒரு கேண்டி (356 கிலோ) பருத்தியின் விலை, ஏப்ரல் 14ம் தேதி நிலவரப்படி, 34 ஆயிரத்து 700 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது. அதேசமயம், கடந்த ஆண்டின் இதே காலத்தில், இதன் விலை, 50 ஆயிரத்து 500 முதல், 83 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி:நடப்பு பருவத்தில், பருத்தி உற்பத்தி அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டால், மத்திய அரசு, 1.15 கோடி பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி, கூடுதல் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து, பொது உரிமை அடிப்படையில், பருத்தி ஏற்றுமதி மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டது. கடந்த 2010-11ம் பருவத்தில், 78 லட்சம் பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகளவில், பருத்தி உற்பத்தி மற்றும் அளிப்பில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.உற்பத்தி அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டால், ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்பது இந்திய ஜவுளி துறையை பாதிக்கும் என, உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏனெனில், கடந்த ஆண்டு, விலையுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், இதன் விலை மிகவும் சரிவடைந்து உள்ளது. இதனால், பருத்தி, சாகுபடி செய்து வந்த, பல விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடிக்கு மாறி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 2012-13ம் பருவத்தில், இதன் உற்பத்தி குறைவதுடன், பருத்தி கையிருப்பும் குறைந்து விடும்.
எனவே, மத்திய அரசு, பருத்தி ஏற்றுமதி குறித்து, மறு ஆய்வு செய்வதுடன், கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள உள்நாட்டு ஜவுளி துறையை, பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இந்திய ஜவுளி துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், இந்திய ஜவுளி துறை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, அண்மையில், மத்திய அரசு, ஜவுளி ஆலைகளின், 35 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, மறுசீரமைப்பு செய்வதற்கு, ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலப்பொருட்கள் :ஏற்கனவே, இந்திய ஜவுளி துறை, இடர்பாட்டிற்கு உள்ளாகியுள்ள நிலையில், எந்த அளவிற்கு, பருத்தி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது என்பது தெரியாததால், வரும் பருவத்தில், இந்திய ஜவுளி துறைக்கு, போதிய அளவிற்கு, பருத்தி கிடைக்காமல் போகக் கூடும். மேலும், வரும் பருவத்தில், பருத்தி உற்பத்தி குறையும் நிலையில், இதன் விலையும் அதிகரிக்கும். அவ்வாறு, விலை உயர்ந்து, பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், மூலப் பொருட்கள் இன்மையால், உள்நாட்டு ஜவுளி துறை மேலும் பாதிப்புக்குள்ளாகும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
…………………..

ஏர்டெல் - ஒபெரா புது ஒப்பந்தம்



புதுடில்லி : தங்களது வாடிக்கையாளர்கள் எளிதில் போன் மூலமாக இ‌ணையதளங்களை பயன்படுத்த ஒபெரா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போட்டு இருக்கிறது ஏர்டெல் நிறுவனம். 

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 253 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் புகுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுக்க செல்போன் ‌மூலம் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதையடுத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதை எளிமைப்படுத்தி கொடுக்கும் வகையில் புதிதாக ஒபெரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது. செல்போன்களில் ஒபெரா பிரவுசரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது ஏர்டெல் நிறுவனம். விரைவில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய பிரவுசரை ஒபெரா உருவாக்கி தர இருக்கிறது.
……………

ஏர்இந்தியா பைலட்டுகள் போராட்டத்தை கைவிட்டால் எந்த நிபந்தனையின்றி ஏற்க தயார் : அஜித் சிங்


புதுடில்லி : ஏர் இந்தியா விமான பைலட்டுகள் போராட்டத்தை கைவிட்டால் அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி ஏற்க தயார் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்துள்ளார். ட்ரீம்லைனர் விமான பயிற்சி, பணி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர்இந்தியா பைலட்டுகள் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர். ஏற்கனவே நஷ்டத்தில் சிக்கி தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம், விமானிகளின் போராட்டத்தால் ஒரு மாதத்தில் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அஜித் சிங் கூறியதாவது, பல்வேறு நெருக்கடி நிலையிலும் ஏர்இந்தியா பணியாளர்களுக்கு ஆதரவாக நான் இருந்துள்ளேன். மே மாத துவக்கத்தில் உள்நாட்டு விமானிகளின் எண்ணிக்கை 26 ஆயிரமாக உள்ளது. இதனை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள நான் விரும்புகிறேன். இதுதவிர ஹாங்காங், சியோல் உள்ளிட்ட நாடுகளுக்கும் புதிய விமான போக்குவரத்தை துவக்க திட்டமிட்டுள்ளோம். இந்தசமயத்தில் ஏர் இந்தியா பைலட்டுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விமானிகள் தங்களது போராட்டத்தை கைவிட தயாராக இருந்தால் எவ்வித நிபந்தனையும் இன்றி அவர்களை ஏற்க தயாராக உள்ள‌ோம். ஏர்இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் இல்லை; ஏஜென்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் விமானிகளை தேர்வு செய்யும் திட்டம் ஏர் இந்தியாவிற்கு உள்ளது; ஏர்இந்தியாவை பொருத்தவரை விமானிகளின் வேலை நிறுத்த போராட்டம் முடிந்து விட்டது; போதிய அவகாசம் கொடுத்த பிறகும் அவர்கள் போராட்டத்தை கைவிட தயாராக இல்லை; சர்வதேச விமான சேவையை தக்க வைத்து கொள்வதுடன் அதனை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அஜித்சிங் தெரிவித்துள்ளார். 
…………………

க்ஸ்யுவி 500 கார் முன்பதிவு ஜூன் 8 முதல் மீண்டும் துவக்கம்



மஹிந்திரா நிறுவனத்தின், எக்ஸ்யுவி 500 என்ற கார், கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலம், புனே அருகே உள்ள சாகன் தொழிற்சாலையில், இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், அறிமுகப்படுத்தப்பட்ட, 10 நாட்களில், 8,000 பேர் முன்பதிவு செய்தனர். அப்போது, மும்பை, டில்லி, பெங்களூரு, சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டுமே இந்த கார் கிடைத்தது. மாதத்துக்கு, 3000 கார்கள் உற்பத்தி என்ற அளவில், இரண்டு மாத உற்பத்திக்கு அதிகமாக முன்பதிவு இருந்ததால், அந்த ஆண்டு அக்டோபரில், முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும், நடப்பு ஆண்டின்ஜனவரி 26ம் தேதி முதல், 10 நாட்களுக்கு மட்டும், முன்பதிவு நடந்தது. இதில், 19 நகரங்களில் கார் விற்பனைக்கு வந்தது. இந்த காருக்கு, 25,000 பேர் முன்பதிவு செய்தனர். அதில் குலுக்கல் முறையில், 7,200 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், சாகன் தொழிற்சாலையில், எக்ஸ்யுவி 500 காரின் உற்பத்தி, மாதத்துக்கு, 4,000 கார்கள் என உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில், இது மாதத்துக்கு, 5,000 கார்கள் என அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, ஜூன் 8ம் தேதி முதல், எக்ஸ்யுவி 500 காருக்கான முன்பதிவு மீண்டும் துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் விலை, ரூ.11.68 லட்சத்தில் இருந்து ரூ.14.11 லட்சம் வரை உள்ளது. காரில், 2.2 லிட்ட் டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபோர் வீல் டிரைவ் வசதியுடனும் இந்த கார் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. 
……………

இந்தியாவில் க்யூ-3 மாடலை அறிமுகப்படுத்தியது ஆடி!


புதுடில்லி : ஜெர்மனியின் ஆடம்பர சொகுசு கார் நிறுவனமான ஆடி தன்னுடைய க்யூ-3 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.26.21 லட்சத்தில் இருந்து ரூ.31.49 லட்சம் விலையில் கிடைக்கும். இந்தியாவில் நாடுமுழுக்க உள்ள 19 டீலர்கள் மூலம் இந்த வகை கார்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தற்போது முதற்கட்டமாக 500 கார்களை மட்டுமே விற்பனைக்கு இருப்பதாகவும், இதற்கான முன்பதிவு இப்போதே தொடங்கிவிட்டதாகவும் இந்தியாவுக்கான ஆடி நிறுவனத்தின் தலைவர் மைக்‌கேல் பெர்செக் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது க்யூ3 வகை மாடல்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெறும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
…………….

@ �N

No comments:

Post a Comment